Friday, September 2, 2016

நோபெல் பரிசில்..பிரதமர் பதவியில்...!


மெல்லிய பூஞ்சாரலாய்

இறங்கிவந்த இறைவன் ஒருநாள்

தனித் தனியே எம்மையணுகி

என்ன வேண்டுமென

அன்பில் வினவினான்!



எனது முறையும் ஆங்கு வர

'எதுவும் வேண்டாம்' என்றேன் யான்!

ஒராச்சர்யக் குறியாய் நிமிர்ந்த இறைவன்

'ஏனென உரக்கக் கேட்க

'அப்படி மேன்மையாய் யாதொன்றையும்

தருவதற்கான சாத்தியம்

இல்லையே உன்னிடம் !

என்றேன் யானும்!


புரியுமாறு எனைப் பேசப் பணித்தான்!

பேசலானேன்:

'அண்டம் படைத்த அன்பனே-அய்யா!

"நரை-திரை-பிணி-மூப்பு-சாக்காடு

இவையெலாம் என்னை

அண்டமுடியாமல் செய்திடுவாயா?

என் மழலைநாட்களின் மகிழ்ச்சி யாவையும்



ஒரு பையில் போட்டு கையளிப்பாயா?

என் அன்புக்குரியோர்க் கதுவே செய்து

என்னுடன் வசிக்கும் பரிசளிப்பாயா?

நன்னீர் உணவு உறைவிடம் தந்து

வெள்ளம் வறட்சி நிலமழியாவொரு

நிலை செய்வாயா?"


என்ன செய்திட முடியும் உன்னால்...?"


இப்படி கேட்டதும் அதிர்ந்த இறைவன்

இளித்தவாறே இறைஞ்சலானான்!

"இழிவு படுத்தாதே; எதையாவது கேளேன்!

ஒரு பொருளோ பதவியோ உயரிய பரிசோ

ஏதோ ஒன்று கேட்டால் மகிழ்வேன்;

கேட்டுதான் தொலையேன்!


"ஒன்றுமே வேண்டாம் இறைவா!

உன்னைக் கண்ட மகிழ்ச்சியே

இன்றைக்குப் போதுமே!

உன்னைக் காணாத போதும்

அப்படியே இருந்தேன்!

இன்பதுன்பமாம் இருமைகள் தம்மை

நீநினைத்தாலும் நிறுத்த முடியாதென

எனக்குத் தான் தெரியுமே!


வெற்று இன்பம் திகட்டும் தினத்-தேன்!

துன்பம்-பனிமலை உருகிக் கரையும்!

ஆசைக் குரங்கு பற்றும் பலகிளை

வேசை மனத்தால் ஆசை நிற்குமா?

இரவு பகலென வரட்டும் இரண்டுமே!

நடுவில் நின்றிடும் நாடகம் அறிவேன்!

நீயே படைத்த பிரபஞ்ச வெளியில்

நிதமும் குழப்பம்... போயதைப் பாரேன்!

வணக்கம் இறைவா! வருகிறேன்" என்றேன்!


மூலையில் கிடந்த மானிடன் ஒருவன்

முண்டியடித்து என்னிடம் வந்தான்!

'விட்டுவிடாதே அரிய வாய்ப்பிது

போனால் வராது....!

நோபெல் பரிசும் பிரதமர் பதவியும்

கேட்டு வாங்கென" காதில் ஓதினான்!


சிரித்தேன் சிரித்தேன்...

அழுகை வரும்வரை விடாது சிரித்தேன்!

கடலில் நுரைக்கும் குமிழிகள் நினைத்தும்..

நோபெல் பரிசில் பிரதமர் பதவியில்

இன்பம் இருப்பதாய்

நினைக்கும் மானுடர்

நினைப்பை நினைத்தும்...

சிரித்தேன் சிரித்தேன்....

அழுகை வரும் வரை விடாது சிரித்தேன்!

-yozenbalki

Sunday, May 27, 2012

புதுவையில் ஒரு தமிழ்ச் சங்க(ம)ம்! Pondy Tamil Literary trip in May 2012


தமிழ் இலக்கிய விழாக்களில் அதிகம் கலந்து கொள்ள முடியாத வருத்தம் எனக்குண்டு. காரணம், எனது உற்ற நண்பர்களுக்குத் தெரியும். நான் சார்ந்த துறை அப்படிப் பட்டது! உளஇயல் துறைப் பணியும் காவலர் பணி போன்று நேரம் காலம் பார்க்க இயலாத திடீர் தன்மை கொண்டது! சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு வர இயலாது. அத்துடன் இருக்கவே இருக்கிறது குடும்பச் சூழல்கள், குழந்தைகளின் கல்வி-அது தொடர்பான போக்கு வரத்து, நேரமின்மை இத்யாதி! 


எனினும், 'இலக்கியச்சோலை' இதழ் ஆசிரியரும் என் இனிய நண்பரும் இளவலுமான தமிழினியன் நடத்தும் எந்தவொரு சிறிய பெரிய விழாக்களிலும் கலந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்து சில வெற்றிகளையும் அடைவதுண்டு! 





















அப்படி எனக்கு நானே வெற்றி அடைந்த ஒரு நாளுக்கான விழாப் பயணம் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு 4.5.2012 அன்று காலை துவங்கியது! பாண்டியிலே காலை முதல் மதியம் வரை ஒரு இலக்கிய நிகழ்வு. அதாவது, பாண்டியில் இலக்கிய சோலை அறிமுக விழா மற்றும் சென்னை/புதுவை கவிஞர்கள்/எழுத்தாளர்கள் சங்கம விழா ......இல் சிறப்பாக நடை பெற்றது! சென்னையில் இருந்து ஒரு சிறியதொரு பேருந்து மூலம் சுமார் பதினைந்து பேர் புறப்பட்டோம். ஏற்பாடு சோலை தமிழ் இனியன். 


திரு. பெரியார் பெரும் தொண்டர் பாண்டி மு. வேலு 
திரு. கவிஞர் ஜலாலுதீன் (புகைப்படங்கள் அவர் கைவண்ணமே)
திரு. சந்தக் கவிஞர் கதிரவன் 
திரு. 


(நண்பர் இனியன் என்னிடம்  விழாவில் கலந்து கொண்டவர்கள் பெயர் விவரங்கள் அனுப்பினால் இதில் மீண்டும் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்...முகங்கள் தெரியும் எனக்கு பெயர் தெரியாது! வேறு சில புகைப்படங்கள் சேர்க்க வேண்டும் என்றாலும் சேர்க்க  முடியும்!)

Thursday, June 2, 2011

Will meet you in blog sooner!

Dear Friends!
As i use my mobile phone for browsing and tweeting
i am unable to come as often to blog spot nowadays.

Will meet you sooner!

Mohan Balki

Friday, January 14, 2011

"பொங்கல்" - பொங்கி மகிழ்ந்திட பூரித்து மகிழ ஒருவழி காணேன்!



ஏனிந்த பொங்கல் ஏமாளித் தமிழா
பூரித்து மகிழ ஒருவழி காணேன்!


பழக்க முறைகளில் ஊறிய தாலே
வழக்கம்போல் ஒரு வாழ்த்து சொன்னேன்!


அடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்
குடிமை வழக்கம் உலகினில் இல்லை!


கொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்
செத்தவன் போலொரு சித்தம் மறந்தே


சிரித்துக் கிடந்து கவலை மறந்து
மரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்


தேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்
'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்!


கழுவாக் குறையாய் காலை நக்கி
பிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு!


ஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்
அகதிகளாய் இன்றலையும் இழி நிலை!


வெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை
உள்ளே விட்டு உறங்கிய தீமை!


சிங்கள காடையர் 'ஹிந்திய' நெஞ்சினர்
சேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு!


துரோகிகள் காட்டில் பெய்த பெருமழை
பெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'!


'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா?
உள்ளில்  பழியாய் உறங்கா நதி!


எமது மழலைகள் அன்னை தந்தையர்
மகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்!


அடியோடு எரித்த அதிகார நிலைகள்
அந்நியன் செய்த பாலியல் வினைகள்!


நெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்
வினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்!


கோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து
கொடிய பகைவனை சமரசம் செய்வார்!


குலுக்கும் நட்பை வெட்டும் கைகளை
'யுத்த பூமியில்' முத்தம் தருவமோ ?


உலகெலாம் பரந்த என்தமிழ் மாந்தர்
உள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்!


தீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை!
எல்லா இரவும் ஒருநாள் விடியும்!

-மோகன் பால்கி 

Sunday, January 9, 2011

முத்துக் குமரன் எங்கள் - சொத்துக் குமரன் !





முத்துக் குமரன்
எங்கள் - தமிழின
சொந்தங்கள் யாவர்க்கும்
சொத்துக் குமரன் !


ஈழ விடுதலைப்
போரின் எழுச்சியை
தீவிரப் படுத்திய
சித்துக் குமரன் !


உலகத் தமிழரை
ஒன்றாய் ஆக்கி
நெருப்பாய் மாற்றிய
வித்துக் குமரன்!


தமிழர் உளமெலாம்
தமிழுள நாள்வரை
தங்கி நிலைபெறும்
காவல் மதில்-அரண் !


-மோகன் பால்கி

Thursday, October 7, 2010

குறையொன்றும் இல்லை.......மறைமூர்த்தி கண்ணா ! பாடல் வரிகள்:



எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்


இந்தப் பாடல் பாடாத வீடுகளே இல்லை எனலாம். இருப்பினும் பாடல் 
வரிகள் முழுமையாகத் தெரியாதவர்கள் அநேகம் பேர் உள்ளனர். 
அவர்களுக்காக இந்தப் பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது:
 ________________________________________

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா...
குறையொன்றும் இல்லை கோ..விந்தா!


கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா,,
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை... மறை மூர்த்தி கண்ணா!


வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
மணிவண்ணா...மலையப்பா..கோவிந்தா...கோவிந்தா..
கோவிந்தா...கோவிந்தா..


திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா...
கண்ணா....திரையின் பின்நிற்கின்றாய் கண்ணா
உன்னை...மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா !


குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா
கோவிந்தா.. கோவிந்தா 


கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !


யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா  உன்மார்பில்
ஏதும் தரநிற்கும் கருணைக் கடல்அன்னை
என்றும் இருந்திட ஏதுகுறை எனக்கு (2)


ஒன்றும் குறைவில்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா... மலையப்பா.. கோவிந்தா.. கோவிந்தா...
கோவிந்தா..கோவிந்தா. .(2)
____________________________________________________________


-மூதறிஞர் இராஜாஜி எழுதி மதுரை சண்முகவடிவுசுப்புலட்சுமி
என்னும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் அன்றும் இன்றும் என்றும் பாடிக் கொண்டிருக்கும் இனிமையான பாடல் வரிகள் இவை !

மீரா திரைப்படத்தில் பக்தியில் தோய்ந்த அவரின் கண்களையும் நாம் மறக்க முடியுமா என்ன?
'மீரா' திரைப்படத்தில்

Monday, September 27, 2010

பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!


பெரியார் என்பது பெயரல்ல; தமிழர் எழுச்சியின் அடையாளம்!
அறிவார் கொள்கை குணக்குன்று; ஆயுதம் தாங்கிய போராளி!

ஏற்றத் தாழ்வுகள் ஒழிப்பதற்கு அறிவியல் கூடம் அவர்கண்டார் !
போற்று மடமைகள்  தூரவிலக்கி தனியாய்நின்று தவம் செய்தார் !

'நேத்தி நேத்தி' எனச்சொல்லி மூலம்நாடும் முனிவனைப் போல்
சூத்திரம் ஒன்றைக் கண்டடைந்த அறிவியல் அறிஞர்  எம்பெரியார்!

"பேதமிருப்பது சாதியி னால் ஜாதி இருப்பது  மதக்குழியில்
மதத்தை ஒழிக்க-ஜாதிஒழி; ஜாதி ஒழிக்க-கடவுளொழி"!

இதுவே பெரியார் சூத்திரமாம்  மூலம் நறுக்கும் மூதுரையாம்
பொதுவாய் பேதம் 'வர்க்கத்தால்' இங்கோ பேதம் 'பிறவி'யினால்!

சூத்திரன் படிக்கக் கூடாதாம் சாத்திரம் சொல்ல வெகுண்டார்பார்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடிமைப் பட்ட வரலாற்றை

மாற்றியமைக்கப் புறப்பட்ட "ஒற்றை ராணுவம்" எம்பெரியார்!
அறிஞரண்ணா  நெகிழ்ந்தே சொல்வார் "என்னதுவாழ்வில் கண்டதும் கொண்டதும்

ஒரேஏ தலைவர் அவர்தாம் பெரியார்; உயர்எண்ணங்கள் மலர்கிற சோலை!
யுகப்பணிதன்னை வாழ்நாள் முடித்தோன்; நூற்றாண்டுகளை குளிகையில் அடைத்தோன்,"

அரியணை மறுத்த பரதன்-அண்ணா தலைவர் பதவி பெரியார்க்கென்றான்
தளபதியாகி ஆட்சியில் அமர்ந்து பெரியார்க்  கனவுகள் சட்டமாக்கினான்!

முத்தமிழ் அறிஞன் மூன்று மந்திரம் தந்தவன் சொல்வான்
"முதல்வர் பதவி ஏற்றநாள்விட தந்தை தடம்பற்றி நடந்தநாட்களே

எந்தன்வாழ்வின் வசந்த நாளென"; எத்துனை அரிய சீடன்அண்ணா?
பெரியார்-அண்ணா தந்தை-தனயன் அதுபோல் பிணைப்பு இனியும்வருமா?

தமிழர் சமூகம் இன்னும்நிமிர காலம் பெரியார் இனிதருமா?
சாதிக் கொடுமைகள் சாடியவீரன்; பெண்கள் சமத்துவம் பேசியதீரன் !

சிறைக்களம்ஆயிரம் செருக்கோடு சென்றவன்; நாடொறும் கூட்டம் தினமொருபயணம்!
அகவை தொன்னூற்றைந்திலும் இளைஞன்; தமிழர்நிமிரவே பேசுவான் எழுதுவான்!

தன்னலம் இலாத ஈடிலாத்தலைவன்; 'உண்மையே'பேசும் தமிழ்க்குல மறவன்!
உலகப்பந்தின் கருவறையில் ஆ!  இவன்போல் ஒருவன் இனிபிறவான்!

Copy Protected by Computer tech tips