Friday, January 14, 2011

"பொங்கல்" - பொங்கி மகிழ்ந்திட பூரித்து மகிழ ஒருவழி காணேன்!



ஏனிந்த பொங்கல் ஏமாளித் தமிழா
பூரித்து மகிழ ஒருவழி காணேன்!


பழக்க முறைகளில் ஊறிய தாலே
வழக்கம்போல் ஒரு வாழ்த்து சொன்னேன்!


அடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்
குடிமை வழக்கம் உலகினில் இல்லை!


கொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்
செத்தவன் போலொரு சித்தம் மறந்தே


சிரித்துக் கிடந்து கவலை மறந்து
மரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்


தேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்
'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்!


கழுவாக் குறையாய் காலை நக்கி
பிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு!


ஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்
அகதிகளாய் இன்றலையும் இழி நிலை!


வெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை
உள்ளே விட்டு உறங்கிய தீமை!


சிங்கள காடையர் 'ஹிந்திய' நெஞ்சினர்
சேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு!


துரோகிகள் காட்டில் பெய்த பெருமழை
பெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'!


'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா?
உள்ளில்  பழியாய் உறங்கா நதி!


எமது மழலைகள் அன்னை தந்தையர்
மகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்!


அடியோடு எரித்த அதிகார நிலைகள்
அந்நியன் செய்த பாலியல் வினைகள்!


நெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்
வினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்!


கோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து
கொடிய பகைவனை சமரசம் செய்வார்!


குலுக்கும் நட்பை வெட்டும் கைகளை
'யுத்த பூமியில்' முத்தம் தருவமோ ?


உலகெலாம் பரந்த என்தமிழ் மாந்தர்
உள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்!


தீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை!
எல்லா இரவும் ஒருநாள் விடியும்!

-மோகன் பால்கி 

No comments:

Post a Comment